"சிந்து! இப்படி வாடா!"
சுடிதாருடன் ஆளுயரக் கண்ணாடியில தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்ட சிந்து,
"வந்துட்டேன் அண்ணா!" அதற்குள் அண்ணி, டிபன் பாக்ஸுடன் சிந்துவின் அறைக்குள் வந்தாள்.
"சிந்து! வெஜிடபுள் புலாவ் வச்சிருக்கேன் பாக்ஸல!"
"சரி அண்ணி!"
"நீ சாப்பிட வா! நேரமாச்சு!"
"வந்துட்டேன் அண்ணி!"
தன் மேக்கப்பை ஒருமுறை சரிபார்த்துக் கொண்ட சிந்து, வெளியே வந்தாள்.
அண்ணன் உணவு மேஜையில் காத்திருந்தான்.
"வா சிந்துமா! ரவா இட்லி சூடா இருக்கு! உங்கண்ணியோட ஸ்பெஷல் டிபன்?"
"சரி சரி!" சிந்து சிரித்தபடி அண்ணன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
"சிந்துமா! நம்ம தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந்தார். தற்செயலா பொருத்தம் பார்த்தேன். பிரமாதமா பொருந்துது! மேற்கொண்டு போகலாமா?"
திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.
"ரெண்டு வருஷம் கூடப் போகட்டுமேண்ணா!"
"அப்படீங்கறே? அப்ப சரி!
"ரொம்ப நல்லா இருக்கு! அவ சொல்லிட்டா, நீங்களும் சரிங்கறதா? இப்பவே இருபத்தி மூணு! இனிமே தள்ளக்கூடாதுங்க! அதது காலா காலத்துல நடக்கணும்!"
"என்னை இந்த வீட்டை விட்டு விரட்டறதுலேயே அண்ணி முனைப்பா இருக்காங்க! இல்லியாண்ணி?"
"பல்லை உடைச்சிருவேன். உன்னை விரட்ட அவளால முடியுமா?"
"எம்பல்லை அப்புறம் உடைக்கலாம்! தபாரு சிந்து! இனிமே தள்ளிப் போடக்கூடாது. நான் சொல்றதைக் கேளு!"
சிந்து பேசலை!
"என்னடீ பேசலை? உம்மனசுல யாருக்காவது இடம் தந்திருக்கியா?"
"அதெல்லாம் இல்லைண்ணி!"
"பின்ன?"
அவள் பேசாமல் இருந்தாள்.
"சொல்லுடா சிந்து! எதுவானாலும் உன் விருப்பப்படிதான் நடக்கும்!"
"எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லைண்ணா! நிச்சயமா அதில்லை!"
"அப்புறம்?"
"சுதந்திரம் போயிருமே, கல்யாணம் செஞ்சுகிட்டா!"
"யாருக்கு?"
"எனக்குத்தான்!"
"அதெல்லாம் ஒண்ணும் போகாது! ஆம்பிளைக்குதான் சுதந்திரம் போகும். இப்ப நானில்லையா? இவ உங்கண்ணி என்னை ஆட்டிப் படைக்கறாளே!"
ஆமா! நான் சொன்ன உடனே கேக்கற ஆளைப்பாரு! அதுக்கெல்லாம் குடுத்து வைக்கணும் சிந்து. எனக்கந்த அதிர்ஷ்டம் இல்லை! ஏதோ உங்கண்ணன் சுமாரா சமைக்கறார். அவ்ளோதான்!"
"கேட்டியாம்மா? அடுத்தது சுமாரா துணி தொய்க்கிறார்... அப்புறம் பாத்திரம் தேய்க்கறார்னு ஒண்னொண்ணா வருவா! இந்த வீட்ல எல்லாம் நான்தான் செய்யறேன்னு இப்பத் தெரியுதா?"
"நீயே செய்ணா! கேக்கவே சந்தோஷமா இருக்கு!"
"அடிப்பாவி! கூடப் பொறந்தவனை குபீர்னு கவுத்துட்டியே!"
"நாங்க ரெண்டு பேரும் ஒரே இனம்!"
அண்ணி பெருமிதமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள்.
"சரி! விஷயத்துக்கு வா!"
"இன்னொரு இட்லி போட்டுக்கோ சிந்து! சூடா இருக்கு!"
"என்னம்மா! தொடர்ந்து போகலாமா?"
"நான் சொல்றேன். நீங்க போங்க! அந்தப் பையன் வீட்ல போய் நாம பேசலாம். அப்புறம் பொண்ணு பார்க்க வரச் சொல்லலாம்!"
"அண்ணி! இங்கே இருந்த சந்தோஷம், அங்கே எனக்குக் கிடைக்குமா?"
"இதைவிடக் கிடைக்கும்! சிந்து! ஆரம்ப காலத்துல கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போ! எல்லாம் சரியாகும். மாப்ளை உன் கைக்குள்ள வந்துட்டார்னா, அப்புறம் நீ வச்சதுதான் ராஜாங்கம் அங்கே! நீ உத்யோகம் பாக்கற பொண்ணு! உன் கால்ல நிக்கற! யார் உன்னைக் கட்டுப்படுத்த முடியும்?"
அவள் பேசவில்லை